போராட்டத்துக்கு வலுச்சேருங்கள் – வேலன் சுவாமிகள் அழைப்பு

தமிழ் மக்களுக்கு இது போன்ற அநீதி ஒருபோதும் இடம்பெறக் கூடாது என்பதற்காக போராட்டப் பேரணியில் ஒன்று சேர்வோம் என மாவட்ட சர்வ மதத்தலைவர்களுள் ஒருவரான வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ் ஊடாக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி இலங்கை பிரதமர் யாழ்ப்பாணம் வருகை தந்த போது, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கமும் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.

இனப்படுகொலையாளியான மகிந்த ராஜபக்ச தமிழர் தாயகமான யாழுக்கு வருகை தந்து எந்த செயற்பாட்டிலும் ஈடுபடக்கூடாது எனவும் ,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியினை 12 வருடங்களாக வழங்கவில்லை எனவும் தெரிவித்து குறித்த போராட்டம் நடைபெற்றது

குறித்த போராட்டத்திலே எமது ஜனநாயக முறையில் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாது அதனை நிறுத்தியும் தாய்மார்கள் மற்றும் வயோதிபப்பெண்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் ஆடைகளை கிழித்தும், தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.

இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் போராட்டப் பேரணி ஆரம்பித்து முற்றவெளியை சென்றடையவுள்ளது.

ஆகவே மதத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெண்கள் அமைப்புக்கள், சிவில் சமூகங்கள், தமிழ் தேசிய கட்சிகள், தொழிலாளர் சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், போக்குவரத்துச்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, எமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும்.- என்றார்.

Leave a Reply