
நாட்டின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது. நேற்றைய சம்பவத்திற்கு பயங்கரவாத சாயம் பூசக் கூடாது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மிரிஹான பெங்கிரிவத்தை பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த மக்களின் போராட்டம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள விசேட காணொலியில் அவர் இதனை கூறியுள்ளார்.
கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் இல்லாத காரணத்தினால், மிரிஹான பெங்கிரிவத்தையில் நேற்றிரவு மக்களின் போராட்டம் வெடித்தது.
இதன் மூலம் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது. இதனை தற்போதைய அரசியலின் வீழ்ச்சி என அடையாளப்படுத்த முடியும்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியும் தோல்வியடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் பல்வேறு குழுக்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. அவை தொடர்பான சாட்சியங்களை வெளியிட்டு, யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
இப்படியான சம்பவங்களின் போது இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இது இனவாத சம்பவம் அல்ல. பயங்கரவாத சம்பவமும் இல்லை. இதனால், அப்படியான கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் இந்த பிரச்சினை மேலும் உக்கிரமடையலாம்.
ஜூப்லி தூண் அருகில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்கள். எனினும் பெங்கிரிவத்தையில் அந்த தோற்றம் மாறியது. அது துரதிஷ்டவசமான சம்பவம்.
இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நாம் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டங்களின் போது எவருக்கும் எந்த சேதமும் ஏற்படக் கூடாது.
அத்துடன் வன்முறைக்கும் இடமளிக்கப்பட கூடாது. மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்புகளில் ஈடுபடும் உரிமை உள்ளது. மக்களின் இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்கேற்க கூடாது.
ஆனால், அரசியல் கட்சிகளுக்கு தமது கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தும் உரிமை இருக்கின்றது. தாமதமானாலும் நாடாளுமன்றத்திற்கும் தற்போது பொறுப்பு உள்ளது.
கஷ்டங்களுக்கு உள்ளாகி உள்ள மக்களுக்கான தீர்வு நாடாளுமன்றத்தின் ஊடாக முன்வைக்கப்பட வேண்டும். கட்சி பேதங்கள் இன்றி தேசிய ஐக்கியத்துடன் நாம் செயற்பட வேண்டும் அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது நாம் எமது இந்த கடமையை நிறைவேற்ற வேண்டும்.
எமது பிரச்சினைகளை வன்முறையின்றி அமைதியான முறையில் தீர்த்துக்கொள்வோம் என நான் பிரார்த்திக்கின்றேன் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.





