அகற்றப்பட்டது அந்தோனியார் சிலை!
பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை!
மன்னார் மடு பகுதியில், சுமார் 40 வருடங்களாகக் காணப்பட்ட பிள்ளையார் சிலை, ஒரே இரவில் சிதைக்கப்பட்டு, அச்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தோனியார் சிலை நேற்று அகற்றப்பட்டது. அந்த இடத்தில் மீளவும் பிள்ளையார் சிலையை வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.
மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருந்த பிள்ளையார் சிலையே சிதைக்கப்பட்டது.
அந்தப் பிரதேசம் காட்டுப்பகுதி என்பதால் அந்தப்பகுதியால் செல்பவர்கள் மதவேறுபாடின்றி பிள்ளையாரை வணங்கிவிட்டுச் செல்வர் என்று பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், அந்தப் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையாருக்கு 4 வருடங்களுக்கு முன்னர் சிறிய கோவில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதற்கட்டமாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டு பிள்ளையார் எழுந்தருளியிருந்தார்.
இந்தநிலையில் அந்தப் பிள்ளையார் சிலையை விசமிகள் நேற்றுமுன்தினம் அகற்றிவிட்டு அந்தோனியார் சிலையை வைத்துள்ளனர்.
இந்தவிடயத்தை அங்கு வாழும் இந்துமக்கள் மற்றும் இந்துக் குருமார்கள் மன்னார் மாவட்டச் செயலருக்கு முறையிட்டனர்.
மன்னார் மாவட்டச் செயலர் ஏ.ஸ்ரான்லி டி .மெல், மடு பொலிஸார் மற்றும் மடு பிரதேச செயலாளர் ஆகியோர் குறித்த பகுதிக்கு நேற்று நேரில்சென்று பார்வையிட்டனர். அத்துடன் புதிதாக வைக்கப்பட்ட அந்தோனியார் சிலை அகற்றப்பட்டு மடு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அந்த இடத்தில் மீண்டும் பிள்ளையார் சிலையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலை சிதைப்புத் தொடர்பாக மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்