கறையற்ற ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்!

அரசியல் தலையீடுகளின்றி மத்திய வங்கி இயங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேசம் நம்பிக்கை கொள்கின்ற, கறையற்ற ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அர்ஜென்டீனா, ஹங்கேரி, சிம்பாப்வே போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் எடுத்த தவறான தீர்மானங்களால் அந்தந்த நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படக்கூடாது என்றார்.

கடனை திருப்பிச் செலுத்தும் போராட்டத்தில் நாடு சிக்கிக்கொண்டுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய அந்நிய செலாவணி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ, அரச நிதி தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்ட அஜித் நிவாட் கப்ராலை, மத்திய வங்கியின் ஆளுநராக பிரேரித்து நியமிக்கின்ற போது, சர்வதேச சமூகத்திற்கு நாடு குறித்தும், நாட்டின் பொருளாதாரம் குறித்தும் குழப்பம் ஏற்படுவதோடு, நம்பிக்கையின்மை வலுப்படும் என்றார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கச் செய்த ஹெஜின் உடன்படிக்கை, அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலத்திலேயே இடம்பெற்றது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்சி பெற வேண்டுமாயின், சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்று, சர்வதேசம் நம்பிக்கை கொள்கின்ற, கறையற்ற ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *