ஐ.பி.எல்.: பெங்களூர் அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 35ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

சார்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தேவ்தத் படிக்கல் 70 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை அணியின் பந்துவீச்சில், பிராவோ 3 விக்கெட்டுகளையும் தாகூர் 2 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சென்னை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ருத்துராஜ் கெய்க்வாட் 38 ஓட்டங்களையும் அம்பத்தி ராயுடு 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சஹால் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, நான்கு ஓவர்கள் வீசி 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகi வீழ்த்திய டுவைன் பிராவோ தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply