புலம்பெயர் நாடுகளில் தியாகி திலிபனின் நினைவேந்தல்!

இலங்கையில் தியாகி திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அரசாங்கம் நீதிமன்றங்கள் ஊடாக தடைகளை விதித்துள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம், தமிழகம், ஐரோப்பா, வட அமெரிக்கா, பசுபிக் பிராந்தித்தில் உள்ள புலம்பெயர்நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.

அக்கினிப்பறவைகள் அமைப்பினரால் நடத்தப்பட்டுவரும் நிகழ்வுகளின் ஒரு அங்கமாக உலகளாவிய 30 மணிநேர அடையாள உண்ணாநிலைப் போராட்டம் இன்று ஐரோப்பிய நேரப்படி பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டு நாளை இரவு நிறைவுக்கு வரவுள்ளது.

இந்த உண்ணாநிலை போராட்டத்துக்கு சமாந்தரமாக அவுஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பிரான்சில் தியாகி திலிபனின் 12 நாள் நினைவு வணக்க நிகழ்வுகள் ஆர்ஜென்தே பகுதியில் உள்ள திலிபன் நினைவு தூபி முன்றிலில் நடத்தப்பட்டு வருகின்றது. இன்று காலையும் நிகழ்வுகள் நடத்தபட்டிருந்தன.

நாளை காலை முதல் மாலை வரை அடையாள உண்ணா நிலைபோராட்டம் இடம்பெறும் அதேநேரம் பிற்பகலில் அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பிரித்தானியாவிலும் நாளை பல அமைப்புக்களால் நிகழ்வுகள் நடத்தப்பட்டவுள்ளன. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் காலை 10 மணி முதல் 4 மணிவரை பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்துக்கு அருகாமையில் அடையாள உண்ணநிலைப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. மாலை 5 மணியளவில் இல்போட் பகுதியில் நினைவு நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

முன்னதாக நேற்று சுவிற்சலாந்து பேர்ண் நகரில் உள்ள சைவநெறிக்கூடத்தில் தியாகி திலிபன் நினைவு பூசை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, சுவிசிலும் திலிபன் நினைவு கண்காட்சிகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply