வடக்கு வங்காள விரிகுடாவில் ‘குலாப்’ சூறாவளி

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த ‘குலாப்’ (Gulab) என்ற சூறாவளியானது வட அகலாங்கு 18.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9N இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத் தொகுதியானது மேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையளவில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் – தென் ஒடிசா கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இந்தப் பிரதேசத்தில் கடலில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேநேரம், மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம்காணப்படுவதாகவும் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் பலத்தமழைவீழ்ச்சி பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும் என்றும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply