ஹனா சிங்கர் மற்றும் சாரா ஹல்டனுடன் கூட்டமைப்பு தனித்தனியே சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோருடன் தனித்தனியான கலந்துரையாடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தியுள்ளது.

இதன்போது வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மற்றும் மார்ச் மாதத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை இடமபெற்ற ஹனா சிங்கருடனான சந்திப்பின்போது குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டிருந்தார்.

அத்துடன், நில அபகரிப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தரவுகள் அடங்கிய விடயங்களை அவருடன் பகிர்ந்து கொள்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தனிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இதன்போது இணை அனுசரனை வழங்கும் நாடுகளுக்கு தலைமை வகிக்கும் பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்து பேசப்பட்டது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த சுமந்திரன், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விடயங்கள் குறித்து இதுவரையில் தமிழ்த்தரப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாதமை குறித்து சுட்டிக்காட்டியதாகவும் கூறினார். (நன்றி கேசரி )

Leave a Reply