காரைக்காலில் சமூக பொறுப்பற்றவர்களால் கொண்டு வந்து விடப்பட்ட 6 அடி நீள நாக பாம்பு

யாழ்ப்பாணம்- நல்லூர், காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் சமூகப் பொறுப்பற்ற நபர்களினால் விடப்பட்ட 6 அடி நீளமான நாக பாம்பு மீள பிடிக்கப்பட்டு, வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் 6 அடி நீளமான நாக பாம்பை இருவர் கொண்டு வந்து விட்டு சென்ற நிலையில், அது குறித்து தகவல் அறிந்த நல்லூர் பிரதேச சபையின் அப்பகுதி வட்டார உறுப்பினர் சி.கௌசல்யா, அது தொடர்பில் தவிசாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதன்பின்னர் அவர் ஊடாக வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை அந்த பாம்பினை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீள பிடித்து, அங்கு வந்திருந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளித்தனர்.

இந்துக்கள் மத்தியில் நாக வழிபாட்டு முறை உள்ளமையால், நாக பாம்பை அடித்துக் கொல்வதற்கு பலருக்கும் தயக்கம். அதனால் அதனை உயிருடன் பிடித்து வந்து ஆலய சூழலில் விட்டு செல்கின்றனர்.

புராதன ஆலயமான காரைக்கால் சிவன் ஆலயத்தை சுற்றி பல பாம்பு புற்றுகள் உள்ளன. அந்த புற்றுக்களுக்குள் தற்போது நாக பாம்பு உள்ளிட்ட பாம்புகள் குடி கொண்டுள்ளன.

இந்த நிலையில் அவை தற்போது, ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும்  விவசாய காணிகளுக்குள்ளும் படையெடுக்கின்றன.

இதனால் அப்பகுதி மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply