பாரிய போராட்டத்திற்கு தயாராகும் எதிர்க்கட்சி…!

நாட்டின் வளங்களை தமது தனிப்பட்ட சொத்துக்களாகக் கருதி அவற்றை குப்பைக்காரர்களுக்கு விற்பனை செய்யும் காட்போட் அரசியல்வாதிகளுக்கு எதிராக பாரிய போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பானம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் தேசிய சொத்துக்களை விற்பனை செய்கின்றமைக்கு எதிராக மக்களினால் தடுப்புச் சுவரொன்று எழுப்பப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நாட்டை மீட்பதற்கான போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை கிழித்தெறிந்து, பாரிய காட்டிக்கொடுக்கும் திட்டத்தையே செயற்படுத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் கெரவலப்பிட்டிய யுகதனவி மின்நிலையத்தை அரசாங்கம் ரகசியமாக விற்று, சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டின் வளங்களை விற்பனை செய்வது தேசத் துரோகச் செயல் என்று தேர்தலுக்கு முன்பு கூறியவர்கள் இப்போது மக்கள் ஆணையை மீறி, தங்கள் தனிப்பட்ட கமிஷன் மோசடிகளை நிறைவேற்றுவதற்காக நாட்டின் வளங்களை கொள்ளையர்களுக்கு விற்பனை செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply