கொழும்பு,ஜுன் 25
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற 5ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா ‘இரட்டை’ வெற்றியை ஈட்டியது.
போட்டியில் 4 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா, அரங்கில் மஞ்சள் ஆடைகளுடன் குழுமியிருந்த ரசிகர்களின் மனங்களையும் வெற்றிகொண்டு ‘இரட்டை’ வெற்றியைப் பூர்த்திசெய்தது.
இப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றதும் அரங்கில் ஒஸ்ட்ரேலியா, ஒஸ்ட்ரேலியா என்ற குரல்கள் ஓங்கி ஒலித்ததுடன் ஆரவாரத்துடன் கரகோஷமும் எழுப்பப்பட்டது. பதிலுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஒரு பகுதியினர் அரங்கை சுற்றிவந்து கைகளை அசைத்து ரசிகர்களுக்கு நன்றி கூறினர்.
அது மட்டுமல்லாமல் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைக்கு வருகை தந்த முழு அளவிலான அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி பாராட்டும் வகையில் அரங்குக்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கவைக்கப்பட்டன.
இந்தப் போட்டி முடிவுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 2 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் இலங்கை கைப்பற்றியது. எவ்வாறாயினும் 4ஆவது போட்டி முடிவுடன் தொடரை இலங்கை தனதாக்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.