இலங்கையில் 10 அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் அனுமதி!

அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி அரிசி, சீனி, பருப்பு, பால்மா உட்பட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்மூலம் சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காட்டி விலையை அதிகரிக்க மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிகளை தடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்வதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பண்டிச்சேரி மற்றும் காரைக்கல் துறைமுகங்களில் இருந்து யாழ்ப்பாணம் காங்சேன்துறை துறைமுகத்திற்கு அத்தியவசிய பொருட்களை கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், மண் எண்ணெய், டீசல் போன்ற எரிபொருட்கள், மருந்து, பால் மா, உரம் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை இந்தியாவில் இருந்து காங்சேன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வந்து நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *