பொது மக்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேண்டுகோள்

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கையிருப்பில் இருக்கும் மருந்துகள் வெகுவாக குறைந்து வருகின்ற நிலையில் வீட்டு வேலைகள் அலுவலக வேலைகள் மற்றும் பொது நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும்.

விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டாலும் நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சிக்கல் நிலை தோன்றியிருக்கிறது அது மாத்திரமில்லாமல் வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார துறையினருக்கும் போக்குவரத்து நெருக்கடி நிலை காணப்படுவதன் காரணமாக உடனடியாக சிகிச்சை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் கைவசம் இருக்கும் மருந்துகளை பத்திரப்படுத்தி கவனமாக கையாள வேண்டும் என்பதோடு குழந்தைகளை, சிறுவர்களை மிகவும் கவனத்துடன் பராமரிக்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பிரிவு  உறுப்பினர் வைத்தியர் பிரசன்ன கொலம்பகே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

Leave a Reply