
சப்புகஸ்கந்த இசுறு மாவத்தை பகுதியில் சட்டவிரோதமான சேமித்து வைக்கபட்டிருந்த ஒரு தொகை எரிபொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த எரிபொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, 820 லீட்டர் டீசல் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் 51 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருப்பவர்களை கண்டறிய இன்றும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் 85 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
லங்கா IOC நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 70 கொள்கலன் மூலம் இவ்வாறு எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருகோணமலையில் இருந்து தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை முன்னெடுப்பதற்கு மேலதிக கொள்கலன்களை பயன்படுத்தவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றும் எரிபொருள் நிலையங்களில் பெருமளவான மக்கள் வரிசைகளில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் இன்று அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கபட்டு வருகின்றது.
அத்துடன், விவசாய நடவடிக்கைகளுக்காக இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு தேவையான எரிபொருள் இல்லாது பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்





