
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமக்கென இருந்த ஒரே வீடு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட காணொளியிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனது வீட்டில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் நுால்களே என்றும் போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால நுால்கள் உட்பட்ட 2500 நுால்கள் அதில் இருந்தன என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.
தமது காலத்தின் பின்னர் இந்த நுால்களை நாட்டின் பல இடங்களிலும் அன்பளிப்பாக வழங்குவதற்கு தாம் தீர்மானித்திருந்ததாகவும் அதனை விட பழங்காலத்து சித்திரங்களும் இருந்தன என ரணில் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது ஒரேயொரு சித்திரமே தம்மிடம் எஞ்சியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும் இதில் முதலாவது வருடமே கடுமையான காலம் என்று அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.




