உரவிநியோக நடவடிக்கை இன்று ஆரம்பம்

கொழும்பு, ஜுலை 12

நாட்டை வந்தடைந்துள்ள  40 ஆயிரம் மெற்றிக் டொன் யூரியா உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் சான்றிதழ் பெறப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த உர பொதி ஒன்று விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், வெளிச்சந்தையில் குறித்த உரப் பொதி 40 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான தொகையில் விற்பனை செய்யப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முறைகேடுகளை தடுக்கும் வகையில் உரத்தினை ஏற்றிச் செல்லும் லொறிகளை ஜி.பி.எஸ். தொழில்நுட்பம்  ஊடாக கண்காணிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, உரம் ஏற்றிச் செல்லும்  லொறிகளை ஜி.பி.எஸ். தொழில்நுட்பம்  ஊடாக கண்காணிப்பது இதுவே முதல் சந்தப்பமாகுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் ஊடாக 65 ஆயிரம்  மெற்றிக் டொன் யூரியா உரம் இலங்கைக்கு  பெற்றுக்கொள்ளப்பட உள்ளதுடன், அதன் முதல் தொகுதியாக 40 ஆயிரம் மெற்றிக் டொன் உரம் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த உரத் தொகுதி  நெல் மற்றும் சோள பயிர்ச் செய்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தேயிலை பயிர்ச்செய்கைக்காக எஞ்சியுள்ள உரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply