வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுடன் ஏற்பட்ட மோதலில் பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை மீனவர்கள் படகுகளில் சென்றிருக்கின்றனர்.
அதன்போது, அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் இந்திய மீனவப் படகுகள் காணப்பட்டிருக்கின்றன.
பருத்தித்துறை மீனவர்களின் வலைகளும், இந்திய மீனவ றோலர் படகுகளால் அறுக்கப்பட்டிருக்கின்றன.
இதுதொடர்பில், இரண்டு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, இந்திய மீனவர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த தீபன், சுரேஸ்குமார், ரவிக்குமார் ஆகிய மீனவர்கள் சிறிய காயங்களுக்குள்ளானதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய மீனவர்கள் தாக்குதலுக்கு தயாராக கற்கள் உட்பட்ட பொருட்களை எடுத்துவந்திருந்தாகவும் பருத்தித்துறை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மோதல் தீவிரமடைந்த நிலையில், இலங்கை கடற்படையினர் அங்குசென்றபோது இந்திய மீனவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.






