பாடசாலைகளை மீண்டும் மூடும் நோக்கத்திற்கு அனுமதிக்காதீர்கள்! கிழக்கு மாகாண ஆளுநர்

கொரோனா தொற்றுநோய் காரணமாக, 200 க்கும் குறைவாக உள்ள மாணவர்களை உள்ளடக்கிய, தரம் ஐந்து வரையுள்ள பாடசாலைகளை இந்த மாதம் 21ம் திகதியன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில், மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எங்கள் மாகாணத்தில் காணப்படுகின்ற 567 ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனினும், நாம் முதலில் செய்ய வேண்டியது, பிள்ளைகள் கற்றுக்கொள்ள சரியான மனநிலையை உருவாக்குவது தான்.

அதன்படி, முதல் இரண்டு வாரங்களில், பாடசாலைக்கு வருகைதரும் பிள்ளைகளின் சீருடைகள் பற்றி யாரும் சிந்திக்கக்கூடாது. அதை கட்டாயமாக்க வேண்டாம். காலணி பற்றி யோசிக்க கூட வேண்டாம் என தெரிவித்தார்.

அத்துடன், இந்த நேரத்தில் மாணவர்களின் மனதை நல்ல நிலையில் உருவாக்க நம்மால் முடிந்தவரை உதவி செய்ய வேண்டும் என்றார்.

சிசுசெரிய பேருந்துகள் மற்றும் எஸ்எல்டிபி பேருந்துகள் போக்குவரத்துக்கு தயாராக உள்ளன. நாங்கள் மாகாண சபையில் பிள்ளைகளுக்கு தேவையான உணவையும் வழங்குகிறோம்.

மேலும், பெற்றோர்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற கற்றுக்கொடுங்கள். அதற்கு முன், பெற்றோர்களின் தலையீட்டில் பாடசாலைகளில் சிரமதானத்தை ஏற்பாடு செய்யுங்கள் . உள்ளூராட்சி அதிகாரிகளின் உதவியுடன் வகுப்பறைகளை கிருமி நீக்கம் செய்யுங்கள் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாடசாலை அதிபர், பிரதி அதிபர், கிராம அலுவலர், பொது சுகாதார பரிசோதர் ,மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியைப் பயன்படுத்தி ஏற்கனவே பாடசாலை சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் தேவையான முடிவுகளை எடுக்க அடுத்த வாரம் கூடிவிடுவார்கள். ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு அரசியல் நோக்கங்கள் காரணமாக பாடசாலைகளைத் தொடங்குவதற்கான இந்த கடினமான முடிவை மாற்றியமைக்க அனுமதிக்காதீர்கள்.

சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களால் பிரதேச செயலகங்களுக்கு அழைத்து வரப்பட்டு, கூடுதல் பயிற்சி அளிக்க 3000 புதிய பட்டதாரிகள் எங்கள் மாகாணத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், அவர்களை பள்ளிகளுக்கு நியமிக்கவும். இது வெற்றி பெற்றால், மீதமுள்ள பாடசாலைகளை விரைவில் தொடங்க முடியும். என்று மேலும் ஆளுனர் கூறினார்.

இந்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி.வனிகசிங்க, மாகாண கல்வி செயலாளர் கிரிஸ்டிலால் பெர்னாண்டோ, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க மற்றும் மாகாணத்தின் அனைத்து வலய கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply