தோல்விகளிலிருந்து பாடம் படிக்கத் தவறும் அரசாங்கம்

மக்­களின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளி­னதும் மீட்­பர்­க­ளாக தம்மை ஆசை காட்டி, 69 இலட்சம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்று ஆட்­சிக்கு வந்த அர­சாங்கம் தனது இய­லா­மையை மறைக்க முடி­யாது தடு­மாறிக் கொண்­டி­ருக்­கி­றது. ஒரே இரவில் எரி­வாயு விலையை ஆயிரக் கணக்­கான ரூபா­வினால் அதி­க­ரித்­ததன் மூலம் தம்மை ஆத­ரித்­த­வர்­க­ளுக்கும் ஆத­ரிக்­கா­த­வர்­க­ளுக்கும் அதிர்ச்சி வைத்­தியம் அளித்­துள்­ளது. எரி­வாயு விலை­யேற்­றத்தைத் தொடர்ந்து பால்மா, கோதுமை மா, பேக்­கரி உற்­பத்­திகள், உணவுப் பொதிகள், தேநீர் உள்­ளிட்ட அனைத்­தி­னது விலை­களும் அதி­க­ரித்­துள்­ளன. விரைவில் எரி­பொ­ரு­ளுக்­கான விலைகள் அதி­க­ரிக்­கப்­படும் என்­பது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் மக்கள் பலத்த விரக்தி நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

கொவிட் 19 முடக்க நிலை கார­ண­மாக தொழில் இன்றி வறு­மைக்குள் தள்­ளப்­பட்­டி­ருந்த மக்­க­ளுக்கு இந்த விலை­யேற்றம் பேரி­டி­யா­கவே வந்து விழுந்­துள்­ளது. கடந்த சில மாதங்­க­ளாக அரிசி, சீனி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு நினைத்­த­வாறு விலைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டன. இதனைக் கருத்திற் கொண்டு அர­சாங்கம் கட்­டுப்­பாட்டு விலை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. எனினும் மேற்­படி பொருட்­களின் இறக்­கு­ம­தி­யா­ளர்­களின் அழுத்­தங்கள் கார­ண­மாக அர­சாங்கம் கட்­டுப்­பாட்டு விலை­களை தளர்த்­தி­யது. இத­னை­ய­டுத்தே இவ்­வாறு விலைகள் ஒரே இரவில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

நிறை­வேற்று அதி­கா­ரத்தை தன் வசம் கொண்­டுள்ள ஜனா­தி­பதி இந்த வர்த்­தக மாபி­யாக்­களை மீறி எத­னையும் செய்ய முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கொவிட் 19 கார­ண­மாக ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளா­லேயே இலங்­கையில் இவ்­வாறு பொருட்­க­ளுக்கு விலை­யேற்ற வேண்டி ஏற்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் கூறி­னாலும், அர­சாங்­கத்தின் தவ­றான முகா­மைத்­து­வமே இதற்குக் காரணம் என்­பதே யதார்த்­த­மாகும்.

ஊழ­லுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தையே தனது முதற் குறிக்­கோ­ளாக முன்­வைத்த ஜனா­தி­பதி, இன்று தனது குடும்­பத்­தினர், நெருங்­கிய ஆத­ர­வா­ளர்கள், ஆலோ­ச­கர்­களே ஊழ­லுக்குத் துணை போயி­ருப்­பதைக் கண்டு செய்­வ­த­றி­யாது திகைத்து நிற்­கிறார். தனது அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிப்­ப­வர்­களே ஊழ­லுக்குத் துணை போவ­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை மறு­த­லிக்க முடி­யாத நிலைக்கு ஜனா­தி­பதி தள்­ளப்­பட்­டுள்ளார்.

வெள்ளைப் பூடு விவ­கா­ரத்தில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சரும் அதி­கா­ரி­களும் பாரிய ஊழல் மோச­டியில் ஈடு­பட்­டுள்­ள­தாக தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்த நுகர்வோர் அதி­கார சபையின் முன்னாள் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் துஷான் குண­வர்­தன பகி­ரங்­க­மா­கவே ஊட­கங்­களில் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கிறார். மறு­புறம் சர்­வ­தேச ரீதி­யாக அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள ‘பண்­டோரா பேப்­பரஸ்’ புல­னாய்வு அறிக்­கை­யிலும் ஜனா­தி­ப­தியின் குடும்­பத்­த­வர்­களின் பெயர்கள் உள்­ள­டங்­கி­யி­ருப்­பதும் பலத்த அவ­மா­னத்தைத் தேடித் தந்­துள்­ளது.

மக்கள் நாட்டை விட்டு வெளி­யே­று­வது பற்றிச் சிந்­திப்­பதே அர­சாங்­கத்­திற்கு கிடைத்­துள்ள மிகப் பெரிய தோல்­வி­யாகும். குடி­வ­ரவு குடி­ய­கல்வு காரி­யா­ல­யங்­களில் ஆயிரக் கணக்­கான மக்கள் தினமும் கிலோ மீற்­றர்கள் தூரத்­திற்கு நீண்ட வரி­சையில் நிற்­பதைக் காண முடி­கி­றது. வெளி­நாட்டு தூத­ர­கங்­களில் விசா கோரி விண்­ணப்­பிக்கும் இலங்­கை­யர்­களின் எண்­ணிக்­கை­யிலும் பாரிய அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது. மூளை­சா­லிகள் நாட்­டை­விட்டு வெளி­யே­று­வ­தற்கு முயல்­வது இலங்­கையின் எதிர்­கா­லத்­திற்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும்.

சட்­ட­வி­ரோ­த­மா­க­வேனும் நாட்­டை­விட்டுத் தப்பிச் செல்ல மக்கள் துணிந்­து­விட்­டனர் என்­ப­தையே கடல் வழி­யாக வெளி­யேற திரு­கோ­ண­ம­லையில் தங்­கி­யி­ருந்த நிலையில் கைது செய்­யப்­பட்ட 69 பேரின் நிலைமை காட்­டு­கி­றது.

அது­மாத்­தி­ர­மன்றி அந்­நியச் செலா­வ­ணியைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்கு இலட்சக் கணக்­கா­னோரை அனுப்பி வைப்­ப­தற்­கான திட்­டங்­க­ளையும் அர­சாங்கம் தீட்­டி­யுள்­ள­தாக அறிய முடி­கி­றது. குறிப்­பாக பணிப் பெண்­க­ளாக இளம் யுவ­திகள், தாய்­மாரை அனுப்­பு­வ­தற்­கான முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. இது நாட்டில் பாரிய குடும்ப, சமூக சீர­ழி­வு­க­ளுக்கே வழி­வ­குக்கும்.

உள்­நாட்டில் பாரிய தொழிற்­சா­லை­களை அமைப்போம், இலட்சக் கணக்­கான வேலை­வாய்ப்­பு­களை வழங்­குவோம் எனக் கூறி பத­விக்கு வந்­த­வர்கள் இன்று அந்­நியச் செலா­வ­ணிக்­காக அப்­பாவிப் பெண்­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி அவர்­க­ளது குடும்­பங்­க­ளையே சீர­ழிக்க முயற்­சிப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

என­வேதான் அர­சாங்கம் இவ்­வா­றான தொடர் தோல்­வி­க­ளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முன்­வர வேண்டும். பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து நாட்டை மீட்பதற்கு தகுதிவாய்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி செயற்பட வேண்டும். நாடு மிகப் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் அரசியல் வேறுபாடுகளை ஒருபுறம் வைத்து விட்டு, எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். அதனையே மக்களும் எதிர்பார்த்து நிற்கின்றனர். இது அடுத்த தேர்தலுக்கு தயாராகின்ற நேரமல்ல. மக்களுக்கு இப்போதிருக்கின்ற முக்கிய பிரச்சினை தேர்தல் அல்ல. மாறாக வயிற்றுப் பசியே என்பதை சகல தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.- Vidivelli

Leave a Reply