அரசியலாகிய ஒரு பாடகி! நிலாந்தன்.

ஒரு வைரஸ் காலத்தில் “வைரலாகிய” ஒரு குரல் யொகானியின் உடையது. அந்தப் பாடலை அவர் கரகரத்த குழந்தைக் குரலில் பாடத் தொடங்குகிறார். நோகாமல் அதிகப் பிரயத்தனமின்றி லேசாக தலையை அசைத்து பாடுகிறார். காணொளியின் முழு சட்டகத்துக்குள்ளும் அவருடைய முகம் குழந்தை பிள்ளைத்தனமாக சிரித்துக்கொண்டு நிறைகிறது.

அது அப்படியொன்றும் உன்னதமான, நுட்பமான பாடல் அல்ல. அவர் பாடிய எனைய பாடல்களும் உன்னதமானவை என்று கூற முடியாது. எனினும் அது ஒரு எளிமையான பாடலாக இருந்தபடியால் எளிதில் வைரல் ஆகியது. சமூக வலைத்தளங்களின் காலத்தில் வைரலாகும் விடயங்கள் எல்லாமும் ஆழமானவைகளாக, உன்னதம் ஆனவைகளாக இருக்க வேண்டும் என்றில்லை. அதன் ஜனரஞ்சகப் பண்பு; அது வெளிவரும் காலம் ; அதைக் கொண்டாடும் பிரபலங்கள் போன்ற பல விடயங்கள் அது வைரலாகும் தன்மையை தீர்மானிக்கின்றன. அமரர் நெவில் ஜெயவீர மதிக்கப்படும் ஒரு சிவில் அதிகாரி. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருளியல் நோக்கு சஞ்சிகையில் பின்வருமாறு கூறியிருந்தார்” புத்திசாலித் தனத்திற்கும் ஜனரஞ்சகத்திற்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை” என்று. நடிகர் தனுஷின் “வை திஸ் கொலவெறி” பாடலுக்கு அது தான் நடந்தது. யொகானிக்கும் அதுதான் நடந்தது.

அவருடைய பாடலை பல தமிழர்கள் விரும்பி ரசித்தார்கள். கொண்டாடினார்கள். சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு தமிழ் ஒளிப்படக் கலைஞர் முகநூலில் அவருடைய பாடலை அறிமுகப்படுத்திய போது நான் யொகானியைத் தேடி அவருடைய ஏனைய பாடல்களுக்குள் போனேன். அவை என்னைப் பிரமிக்க வைக்கவில்லை. அவருடைய குடும்ப விவரத்தை தேடினேன். அவருடைய தந்தை ஒரு ராணுவ அதிகாரி என்று தெரிந்தது. அவர் ஒரு கீழ்நிலை அதிகாரியாக இருந்திருக்க முடியாது என்ற ஊகம் எனக்கு தொடக்கத்திலேயே இருந்தது. யொகானி வெளிநாடுகளுக்கு போகக்கூடிய வளம் பொருந்திய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. அவருடைய தாயார் ஒரு விமான பணிப்பெண் என்று கூறப்பட்டது. அதனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று யோசித்தேன். ஆனால் ருவிற்றரில் புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் அவருடைய சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றின் காணொளித் துண்டைப் பகிர்ந்த போது அவரைப் பற்றிய பின்னணி மெல்ல மெல்ல தெரியத் தொடங்கியது. இது தொடர்பில் ருவிற்றரில் நீண்ட வாதப்பிரதிவாதங்களும் நடந்தன. நடந்து கொண்டிருக்கின்றன. அவர் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கிறார். தனது தந்தையின் தரப்பை வடக்கையும் கிழக்கையும் இணைத்த வீரர்கள்; கதாநாயகர்கள் என்று புகழ்கிறார்.

சர்ச்சைக்குரிய அப் பாடலின் நறுக்கப்பட்ட காணொளித் துண்டு தமிழ் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவத் தொடங்கியது. தமிழ்த் தரப்பில் அவருக்கிருந்த ஆதரவு குறையத் தொடங்கியது. அவருடைய தகப்பனார் யார் என்பதை கண்டுபிடித்து போரில் அவருடைய பங்களிப்பு என்ன என்பதை கண்டுபிடித்து புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் இருந்து வரும் ஊடகங்கள் வெளிப்படுத்தத் தொடங்கின.எனினும் யொகானி உலகப் பிரபல்யம் அடைந்துவிட்டார். இசையின் மகத்துவம் அதுதான். அது ஒரு உன்னதமான பாடல் இல்லை என்ற போதும் அதன் எளிமையும் ஜனரஞ்சகத் தனமும் சமூகவலைத்தளங்களின் காலமும் அவருடைய பாடலை வைரல் ஆக்கின. சரத் பொன்சேகா அவரை புகழும்போது அவருடைய தந்தையையும் சேர்ந்துக் கொண்டாடினார். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மாவிலாற்றில் முதலாவது பாடத்தை கற்பித்தது அவருடைய தந்தை என்று கூறினார். உலகம் முழுவதும் வைரலாகிய ஒரு பாடகியை அவர் தன்னுடைய ராணுவச் சட்டகத்துக்குள், யுத்த வெற்றி வாதத்துக்குள் சுருக்கினார். அங்கேதான் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் குறுக்கம் தெரிந்தது.உலகம் முழுவதும் தெரியவந்த ஒரு பாடகியை அவர்களுக்கு எப்படி உரிமை கோரினார்கள் ? என்பது.

அது ஒரு உன்னதமான பாடல் இல்லை என்ற போதிலும் இசைக்கு மொழி இல்லை, இனம் இல்லை, மதம் இல்லை,அது உலகளாவிய ஒரு மொழி என்பதனால் அந்த பாடலுக்கு அத்தனை பிரபலம் கிடைத்தது. எனினும் யொகானியின் அரசியல் நிலைப்பாடு அல்லது அவருடைய அரசியல் சாய்வு தமிழ் மக்கள் மத்தியில் அந்தப் பாடலுக்குள்ள கவர்ச்சியைக் குறைத்துவிட்டது. அவர் தனது தந்தையின் மகளாக ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுப்பது அவருடைய தெரிவு. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதும் தன் தந்தையின் தரப்பை வீரர்களாக சித்தரிப்பதும் அவருடைய தெரிவு. ஆனால் அவருடைய பாடலை கொண்டாடுவதா இல்லையா என்பதும் தமிழ் மக்களின் தெரிவு. ஓரு கலைஞரின் அரசியல் நிலைப்பாடு என்பது இந்த இடத்தில் கவனிப்புக்குரியதாகிறது. அதிலவருடைய ஆறம் சார்ந்த நிலைப்பாடு எது என்ற கேள்வி எழுகிறது.

தனது பாடல் இப்படி வைரலாக மாறும் என்று யொகானி நிச்சயமாக நம்பியிருக்க மாட்டார். அவருடைய எனைய பாடல்களை பார்க்கும் யாரும் அதை ஊகிக்கலாம். ஆனால் அந்தப் பாடல் உலகம் முழுவதும் பார்க்கப்படும் ஒரு நிலைமை வந்தபோதுதான் அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களும் மேலெழுந்தன. இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரற்ற ஒரு படைத் தரப்பை வெற்றி வீரர்களாக கொண்டாடும் ஒரு பாடகியை போர்க்குற்றங்களுக்கு எதிராக போராடுவோரும், மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராகப் போராடுவோரும் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் மக்கள் கூட்டங்களும் கொண்டாடுவார்களா?

படைப்பாளியும் புலமைமையாளருமான எனது நண்பர் ஒருவர் கேட்டார் ” யொகானியின் அரசியலைப் பற்றி எதுவும் தெரியாமல் அவரை ரசிப்பவர்கள் ஒருபுறமிருக்கட்டும். இந்தியா அவருக்கு ஏன் ஒரு கலாச்சார தூதுவர் அந்தஸ்தை கொடுத்தது? அப்படி கொடுக்கும்போது இந்தியாவுக்கு யொகானியின் தகப்பனுடைய பின்னணி பற்றித் தெரியாமல் இருந்திருக்குமா ?” என்று.

ஆனால் யொகானி அவ்வாறு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார தூதுவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வைரலாக மாறிய அவருடைய பாடலை புகழ்ந்து கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் செப்டம்பர் 18ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்பில் “மிகப் புதிய கலாச்சாரத் தூதுவர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் அது நாட்டின் உத்தியோகபூர்வ பிரகடனம் அல்லவென்றும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக இந்தியா ஏ.ஆர்.ரகுமானை ஒரு கலாச்சார தூதுவராக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ அல்லது கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலோ அவ்வாறு யோகானியை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார தூதுவராக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. தூதரகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காணப்பட்ட மிகப் புதிய கலாச்சார தூதுவர் என்ற வார்த்தையை வைத்து நெற்றிசன்கள் அதை இந்தியாவின் உத்தியோகபூர்வ பிரகடனமாக பிரசித்தப்படுத்தி விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

எனினும், இந்த இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். அவர் எந்த அடிப்படையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மிகப்புதிய கலாச்சார தூதுவர் ஆனார் ? வைரல் ஆகிய ஒரே காரணத்துக்காகவா?அவரை அவ்வாறு அழைப்பதன் மூலம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் சிங்கள மக்களுக்கு உணர்த்த முயலும் “கனெக்ரிவிற்றி” என்ன? தமிழ் மக்களுக்கு உணர்த்த முயலும் “கனெக்ரிவிற்றி” என்ன?

Leave a Reply