இந்திய இழுவைமடிகள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடித் தொழில்களால், சுற்றாடல் அழிவைத் தடுப்பதற்காக 2017 இல. 11 இழுவைமடிகளுக்கு எதிரான சட்டம் மற்றும் 2018 இல. 01 வெளிநாட்டுப் படகுகள் கண்காணிப்புச் சட்டங்கம் ஆகியவைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் அனுப்பிய அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கடந்த 24 வருடங்களாக இலங்கையிலுள்ள மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குறிப்பாக சிறு மீனவர்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்ற ஒரு சிவில் அமைப்பாகும்.
அந்தவகையில், 30 வருட கால கொடூர யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு, தமது வாழ்வாதாரங்களை இழந்து, பல துன்பங்களை அனுபவிக்கும் வடகிழக்கு மீனவர்கள் மற்றும் அனைத்து மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்றும் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி முறை, வாழ்வாதார நிலைகள் அபிவிருத்தி செய்யப்படாமை, புலம்பெயர் மீனவர்களால் எற்படும் பிரச்சினைகள், மீனவர்களின் பல நிலங்கள் இதுவரை விடுவிக்கப்படாமை போன்றவைகளாகும்.
இவ்வாறிருக்க, ஆயிரக்கணக்கான இந்திய இழுவைமடி படகுகள் வட பகுதியின் கரையை அண்டிய பிரதேசங்களுக்குள் புகுந்து, மீனவ வளங்கள் மற்றும் மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்து வருகின்றமையானது, வட பகுதி மீனவர்கள் முகம் கொடுக்கும் மிகப் பெரிய பிரச்சினையாகும்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்களின் வருகை வளர்ச்சியடைந்துள்ள அதேவேளை, கரைக்கு மிக அண்டிய பகுதிகளில் தொழிலை மேற்கொள்கின்றனர்.
இதனால், இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிப்பதற்கான வழிகளும் உருவாகின்றன. கடந்த 9 ஆம் திகதி வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த 15 மீனவர்களின் வலைகள் அழிக்கப்பட்டதாகவும், அதற்கு முதல் குருநகர் மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து காணப்படுகின்ற இப்பிரச்சினைக்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் நிலையான தீர்வு ஒன்றை வழங்கவில்லை.
தற்போது இப்பிரச்சினை வட பகுதி மீனவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமு. சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் ரீதியில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் மற்றும் அதிகாரமிக்கவர்கள் எந்தவிதமான சாதகமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறந்த ஆயுதங்களாக இருக்கும் 2017 இல 11 இழுவைமடிகளுக்கு எதிரான சட்டத்தையும், 2018 இல 01 வெளிநாட்டுப் படகுகள் கண்காணிப்புச் சட்டத்தையும் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
இந்த கோரிக்கையை முன்வைத்து சாதகமான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளை எந்த நபர்கள் அல்லது அமைப்புகள் மேற்கொண்டாலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் என்ற வகையில் ஒத்துழைப்புகளை வழங்குவோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


