விவசாயமே எமது வாழ்வாதாரம்! உரத்தினை வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

விவசாயத்திற்கான உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியா இலுப்பையடிப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநலசேவை நிலையம் மற்றும் பம்பைமடு, நெடுங்கேணி, கனகராஜன்குளம் ஆகிய கமநல சேவை நிலையங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

விவசாயமே எமது வாழ்வாதாரம். தற்போது பயன்படுத்தப்படும் நெல்லினங்கள் அனைத்தும் பசளையின் தூண்டல் பேற்றினால் விளையக்கூடியவையாகவே உள்ளது.

எனவே அதற்கான பசளையை வழங்காவிட்டால் அது உரிய விளைச்சலை தராது. அந்த இராசயன உரத்தினை இடைநிறுத்தும் செயற்பாட்டினை பகுதியாக முன்னெடுத்திருக்க முடியும். அதனை முழுமையாக தடைசெய்து விவசாயிகளின் வயிற்றில் இந்த அரசு அடித்துள்ளது.

எமது மண் இரசாயன உரத்துக்கு பழக்கப்பட்டது. சேதனப்பசளை மண்ணை வளப்படுத்துமே தவிர அதில் உள்ள மூலப்பொருட்களின் அளவு மிகவும் குறைவு. அது நெல்லின் விளைச்சலை பெரிதும் பாதிக்கும். அதனால் நட்டம் ஏற்படும் நிலைமையே காணப்படும்.

எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு எமக்கான மானிய உரங்களை வழங்கி நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, உரத்தையும் உரமானியத்தையும் உடனே வழங்கு, யூரியா பசளையை நிறுத்திய நீ இயற்கை பசளையை ஏன் தரவில்லை? ஆகிய வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Leave a Reply