கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் பைஸர் தடுப்பூசி நாடளாவிய ரீதியில் ஓக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக வட மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கும் அவர்களது பாடசாலைகளிலேயே இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பாடசாலையை விட்டு விலகிய 18, 19 வயதுடையவர்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு 18, 19 வயதுடைய அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையை, தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
தடுப்பூசி அல்லது மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் ஓக்டோபர் மாதம் 23, 30 ஆம் திகதி தடுப்பூசி வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது.
அத்துடன், திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு 18, 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கலானது முடிவுக்குவரும் நிலையில் அதனைத் தொடர்ந்து 17, 16, 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.






