மதுரங்குளி, கரிக்கட்டைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள பெண்ணொருவர் நீண்ட காலமாக நபர் ஒருவருடன் கள்ளத் தொடர்பை பேணி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை அறையொன்றில் தனது கள்ளக் காதலனுக்கு இரவு நேரச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த போது அங்கு வந்த குறித்த பெண்ணின் மகன் இதனைப் பார்த்ததுடன் கடுமையாகவும் கண்டித்துள்ளர்.
தாயின் கள்ளக் காதலனை வீட்டை விட்டு வெளியே போகுமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து, தாயின் கள்ளக் காதலனுக்கும், இளம் குடும்பஸ்தரான மகனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அந்த வாய்த்தர்க்கம் முற்றியதால், ஆத்திரமடைந்த தாயின் கள்ளக் காதலன் அருகிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து காதலியின் மகனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் மகளை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த இளம் குடும்பஸ்தரின் மனைவி, சுகயீனமடைந்துள்ள தனது தாயை பார்ப்பதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு சென்ற நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பனவற்றின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், இக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய தாயின் கள்ளக் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், முந்தல் பொலிஸாருடன், தடவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







