காணாமற்போன மீனவனை மீட்டுத்தரக் கோரி தமிழக மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்கு நுழைந்த வேளை, கடற்படையினரின் படகில் மோதி விபத்திற்குள்ளான இந்தியப் படகில் பயணித்த, காணாமற்போன மீனவனை மீட்டுத்தரக் கோரி மீனவர்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டைப்பட்டினத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்த மறியல் போராட்டத்தில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மூழ்கடிக்கப்பட்ட விசைப் படகில் பயணித்த ராஜ்கீரனை மீட்டுத்தருமாறு கோசம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்திய மீனவர்களின் படகு ஒன்று காரைநகர் கோவலம் கடற்பரப்பிற்குள் உள்நுழைந்த வேளை அதனை கடற்படையினர் விரட்ட முற்பட்டபோது விபத்திற்குள்ளானது.

இதன்போது கடற்படையினரின் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது. இவ்வாறு மூழ்கிய படகில் ராஜ்கீரன், சுகந்தன், சேவியர் ஆகியோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில், சுகந்தன், சேவியர் ஆகிய மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றி காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆனால், காணாமல்போன ராஜ்கீரனை இரவிரவாக இன்று அதிகாலைவரை தேடுதலில் ஈடுபட்டபோதும் அவரை இன்னும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply