கோப்பாயில் வாள்வெட்டு: ஒருவர் கைது!

கோப்பாய், பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்த வாள்வெட்டு கும்பல் வாகனம் மற்றும் வீட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்புடைய, ஏனையோரின் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், ஏனைய சந்தேக நபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள இளைஞனுக்கு இடையில் சிறு வாய்த்தர்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்கு பழிவாங்குவேன் என சபதம் போட்ட நபர் கைக்கூலிகளை அமர்த்தி இந்த வன்செயலை புரியவைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வீட்டு யன்னல்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் வாகனத்தின் கண்ணாடி என்பன அடித்துடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமையுடன், 58 வயதுடைய முதியவர் வன்முறை கும்பலின் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply