சிலாபம், முந்தல் ஆலய சந்தி பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பூரான் கடித்ததில், குழந்தை நித்திரையிலேயே உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குவில ஆலய சந்தி பகுதியைச் சேர்ந்த, பிறந்து 22 நாட்களேயான மிரிசகெ சித்துப திலும் சச்சித்ர என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த குழந்தை, தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்துள்ளதுடன் தந்தை தனியாக ஓரிடத்தில் உறங்கியுள்ளார்.
அதிகாலையில் எழுந்து பார்த்த போது, குழந்தை எவ்வித அசைவுமின்றி காணப்பட்டுள்ளமையுடன், குழந்தையின் உடல் குளிர்ந்து காணப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதன்பின்னர், குழந்தையின் தந்தை வீட்டுக்குச் சென்று குழந்தை உறங்கிய கட்டிலைப் பரிசோதித்த போது, கட்டிலில் பெரிய பூரான் ஒன்று காணப்பட்டுள்ளது.
ஏதோ ஒரு பூச்சி குழந்தையின் முதுகில் சிராய்ந்துள்ளதன் அடையாளங்கள் இருப்பதாக வைத்தியசாலையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குழந்தையின் மரணம் தொடர்பான ஆரம்ப விசாரணை இன்று நடைபெறுகிறது.






