புளொட் அமைப்பின் செயலாளர் சுப்பிரமணியம் சதானந்தன் காலமானார்!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் செயலாளர் ஆனந்தி என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சகாதனந்தன் இன்று காலமானார் .

1945ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி – யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, கொம்மாந்துரை கிராமத்தில் பிறந்த ஆனந்தி அண்ணர் அவர்கள் -1970களின் ஆரம்பம் முதலே – காந்தீயம் அமைப்பில் இணைந்து பணியாற்றி வந்திருந்தார்.

காந்தீயம் அமைப்பின் பணிப்பாளர் மருத்துவர் ராஜசுந்தரம் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து,அவரும் தேடப்பட்ட ஒரு சூழ்நிலையில், தலைமறைவு வாழ்வுக்குள் சென்றார்.

அதனை தொடர்ந்து – ஆனந்தி அண்ணர் அவர்கள், உமாமகேஸ்வரன் அவர்களுடன் இணைந்து – புளொட் அமைப்பில் இணைந்து, தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் செயற்பட்டு வந்தார்.

மேலும் 1989ஆம் ஆண்டு, புளொட் அமைப்பு – தனது அரசியற் பிரிவை, ஓர் அரசியற் கட்சியாக இலங்கையில் பதிவு செய்த போது “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி” என்ற அந்த அரசியற் கட்சியின் செயலாளராக, உமாமகேஸ்வரன் அவர்களால், ஆனந்தி அண்ணர் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை – அவர் அந்த பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்தார்.ஆனந்தி அண்ணரின் இறுதி கிரியை நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு கொக்குவில் என்ற முகவரியில் இருக்கும் அவரது வீட்டில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இதில் புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply