நாளைய பாடசாலைகள் ஆரம்பமாகும் நிலையில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் மட்டும் தான் பாடசாலைகளுக்குச் செல்லவேண்டும் ஏனைய ஆசிரியர்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயணத்தடை நீக்கப்படும் வரையில் பயணத்தடையைத் தாண்டி ஆசிரியர்கள் எவரும் பயணிக்கவேண்டிய அவசியமில்லை.
நாளை நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த ஆர்ப்பாட்டங்களில் அனைவரும் பங்குகொள்ளவேண்டும்.
நாளையிலிருந்து புதிய வடிவத்தில் எமது தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
அதனடிப்படையில், ஆசிரியர், அதிபர்கள் கடமைகளுக்காக தங்களுடைய தனிப்பட்ட தொடர்பாடல் உபகரணங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை மாத்திரம் அதிபர்கள் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாத்திரமே மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புடையவராதல்.
வசதிகள் வழங்கப்படும் வரையில் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி இருத்தல்.
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரச விடுமுறை தினங்களிலும் கடமைகளில் ஈடுபடாதிருத்தல்.
ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் வாரநாட்களில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்பித்தல் நடவடிக்கைகள் மாத்திரம் ஈடுபடல்.
வெளி நிறுவனங்களில் இருந்து வரும் கடமைகள், பாடசாலைகளின் வௌ;வேறு வேலைத்திட்டங்கள், அடையாள அட்டை தயாரித்தல், சுகாதாரப் பிரிவு நடவடிக்கை, வேலைத் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், வலய மற்றும் கோட்ட காரியங்களுக்கு தகவல்களை வழங்குதல், தர ஆவணங்களை தயார் செய்தல், வருடாந்த மற்றும் ஐந்தாண்டு திட்டங்களை தயாரித்தல், பொருட்கள் மதிப்பாய்வு, பாடசாலை கல்விச் சுற்றுலா மற்றும் வேலைத் திட்டங்களுக்காக அழைத்துச் செல்லல், பாடசாலை அபிவிருத்தி குழுக் கூட்டத்தை நடத்துதல் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதை தவிர்த்தல் போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவோம்.
அரசாங்கம் எங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை ஒரே கட்டத்தில் எட்டப்படவேண்டும். அதுவரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.






