வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிய கோயில் பகுதியில் கடந்த மாதம் வன்முறைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி வட்டுக்கோட்டைப் பொலிஸார் வலை வீசி வருகின்றனர்.
அதனடிப்படையில், அராயில் உள்ள திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரமோகனது இல்லத்தில் சந்தேகநபர் ஒருவர் மறைந்திருந்த விடயம் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதற்கு முயன்றனர்.
ஆனால், திடீர் மரண விசாரணை அதிகாரி, இந்நபர் தனது வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார் என்றும் அவருக்கும் குறித்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனக்கு பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் எனவும் அவரை கைது செய்ய வேண்டாம் என்று பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு பொலிசார், பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எங்களுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தனர்.
அதன் பின்னரும், குறித்த அதிகாரி நீண்ட நேரமாக பொலிசாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கரையும் இன்னொரு சந்தேக நபரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நேற்று மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.






