பா.அரியநேத்திரன் மு.பா.உ.

மாகாணசபை தேர்தல் விடயத்தில் இந்தியாவுக்கும் தண்ணீர் காட்டுகிறதா இலங்கை அரசு என்ற சந்தேகம் இப்பொழுது பலரின் மத்தியில் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

தேர்தல் முறைமைகள் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தற்போது கூறிய கருத்து தொடர்பாக மேலும் கூறுகையில்.

உண்மையில் இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாணசபை தேர்தலை உடன் நடத்தவேண்டும் என்று இந்திய தரப்பு இராஜதந்திரங்கள் இலங்கை அரசை வலியுறுத்தும்போது எல்லாம் அவர்களை திருப்த்திப்படுத்துவதற்காக தாம் மாகாணசபை தேர்தல்களை உடன் நடத்துவதற்கான ஆயத்தங்களை செய்வதாக ஊடகங்களில் செய்திகளை தெரிவித்தாலும் அரசுக்கு எந்த தேர்தல்களையும் இப்போது நடத்தும் எண்ணம் இல்லை.

இதற்கான பிரதான காரணம் தற்போதய அரசின் பொருளாதார கொள்கை திட்டமிட்டு செயற்படுத்தாமையால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தினமும் பெருமளவில் உயர்ந்துள்ளன. வெங்காயம் தொடங்கி முட்டையின் விலையிலும் கைவைத்துள்ளது இந்த அரசு.

விவசாயிகளுக்கு படிப்படியாக இரசாயன உரப் பாவனையில் இருந்து சேதன உரப்பசளை பாவனைகளை ஊக்குவிப்பதற்கு எந்த திட்டங்களும் இல்லாமல் அதற்கு பதிலாக திடீரென இராணுவ நடவடிக்கை போன்று இரசாயன உரம் நிறுத்தப்பட்டதால் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு அரசுக்கு எதிராக மாறியுள்ளது.

இதுபோன்று ஆசிரியர்கள் தொடர் போராட்டம்,அரச ஊழியர்களின் அதிருப்தி எல்லாமே தற்போதய அரசுக்கு எதிராக மக்கள் மட்டுமல்ல இந்த அரசை ஆட்சிபீடத்தில் ஏற்றிய புத்த பிக்குகளும் அரசை எதிர்கின்ளனர்.

இந்த நிலையில் மாகாணசபை தேர்தலோ அல்லது பிரதேச சபை தேர்தல்களோ நடந்தால் மொட்டு அரசு மண்கவ்வக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இவைகளை கருத்தில்கொண்டே மாகாணசபை தேர்தலை இழுத்தடிப்புக்காக அரசு இரண்டு் யுக்திகளை கையாளவுள்ளது.

முதலாவதாக தேர்தல் முறைகளை மாற்றப்போகின்றோம் என கூறி காலத்தை இழுத்தடிப்பது.
இரண்டாவதாக கொபிட்-19, தாக்கம் விரைவில் ஐந்தாம் அலை வரப்போகிறது என காரணம் காட்டி எதிர்கட்சிகளின் கவன ஈர்ப்பு போராட்டங்களை அடக்குதல். இந்த இரண்டு விடயங்களை கூறிக்கொண்டே தேர்தல்களை காலம் கடத்தி தமக்கு ஆதரவு வரும்போது தேர்தல்களை நடத்துவதே அரசின் திட்டம்.

நல்லாட்சியில் கூட மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தும் வாய்பு இருந்தும் அதை ரணில் மைத்திரி இழுத்தடித்ததை போன்று தற்போதய மகிந்த கோட்டா அரசு இழுத்தடிக்கின்றது.

முன்னாள் பிரதமர் ரணில் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டாலும் அவருக்கும் மாகாண சபை தேர்தல்கள் நடத்த விருப்பமில்லை அவரின் கட்சியும் தென்பகுதியில் சரிவு நிலை உள்ளது. சிலவேளை இவரும் தற்போதய அரசுக்கு மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டாம் என ஆலோசனை கூறினாலும் ஆச்சரியமில்லை.

இந்தியாவின் அழுத்தம் வரும்போது மட்டும் கூட்டங்களை கூட்டி மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்துவோம் என்று ஊடகங்களுக்கு மட்டுமே செய்தியை வழங்கும் நிலைதான் இப்போது உள்ளது.

இதில் ஒன்றுதான் கடந்த மாதம் நிதி அமைச்சர் பசீல் ராசபக்ச தெரிவித்த கருத்து ஒன்று வெளிவந்தது அதாவது எமது தமிழ்தேசி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் சமர்பித்த மாகாணசபை தேர்தல் திருத்த முன்மொழிவுக்கு அமைவாக விரைவில் மாகாணசபை தேர்தல் நடத்துவதற்கு அரசு தயார் என சில தமிழ் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வந்ததை நாம் அறிவோம் அதுவும் ஒரு ஏமாற்றுவித்தை என்பது இப்போது அமைச்சரவை பேச்சாளரின் கருத்தில் இருந்து நோக்கமுடிக்கிறது எனவும் மேலும் கூறினார்.

Leave a Reply