ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் அனைவரையும் கல்வி நடவடிக்கைகளுக்கு தயாராகும் வகையில் நாளை தொடக்கம் முதல் வாரத்தில் உளவள பயிற்சிகள் மற்றும் மகிழ்விக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பாடசாலை சமூகத்திடம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கேட்டுள்ளார்.
அத்துடன், அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் முற்பகல் மற்றும் பிற்பகல் என பாடசாலை நேரசூசிகளை மாற்றியமைத்தல் அல்லது வாரத்தில் குறிப்பிட்ட நாள்களில் தரம் ரீதியாக நேரசூசியை தயாரிப்பது பாடசாலை சமூகம் மற்றும் வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து தயாரிக்குமாறு அதிபர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மாணவர்கள் இழந்துள்ள பாடசாலைக் கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளை மீட்கும் திட்டங்களை வகுக்குமாறு மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களத்துக்கு மாகாண ஆளுநர் பணித்துள்ளார்.
நாடுமுழுவதும் தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை நாளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.
அதனடிப்படையில், வடக்கு மாகாணத்தில் 906 பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






