அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்து மன்னாரில் விவசாயிகள் போராட்டம்!

விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் இன்று காலை மன்னார் மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இடம்பெற்றது.

மன்னார், மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சந்தியில் ஆரம்பமான ஊர்வலம், உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் வரை சென்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய மகஜர் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட அரச அதிபர், மகஜரை ஜனாதிபதிக்கு உடனடியாக கையளிப்பதாகவும், எமது விவசாயிகள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்தவர்கள் .பல்வேறு அழிவுகளுக்கு முகம் கொடுத்தும் சோர்ந்து போகாமல் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து போகாமல் தலை நிமிர்ந்து நிற்பார்கள் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

மேலும், தமது கோரிக்கை அடங்கிய மகஜர் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டதோடு, உடனடியாக இரசாயன உரத்தை வழங்க துரித நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அஸாத் ஸாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

Leave a Reply