கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத் தலைவர்கள் பிரதமருக்கு பாராட்டு!

கொரோனாக் காலப்பகுதியில் இரு கப்பல்களை தயாரித்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு, கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

35 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை கொண்ட அல்கா மற்றும் ஸான் அல் அராக் ஆகிய இரு கப்பல்கள் கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டப்பட்டதுடன், அவ்விரு கப்பல்களும் எதிர்வரும் 4ஆம் திகதி அந்நாட்டில் வைத்து ஈராக் அரசாங்கத்திற்கு கையளிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி கப்பல் பழுபார்ப்பு நடவடிக்கைகளுக்காக பிராந்திய கிளையொன்றை எதிர்வரும் 2ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு முதல் முறையாக ஆரம்பிப்பதாக கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி னு.ஏ.அபேசிங்க இதன்போது தெரிவித்தார்.

திருகோணமலைக்கு மேலதிகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மையமாகக் கொண்டு தற்போது காணப்படும் அலுவலகத்தின் ஊடாக தமது சேவையை எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இக்கப்பல்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனம் இன்று பிரதமருக்கு உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்தது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பலமாக விளங்கி கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் 100 மில்லியன் அமெரிக்க டொலரையும், 2022ஆம் அண்டில் 120 மில்லியன் அமெரிக்க டொலரையும் வருவாயாக ஈட்டுவதற்கு எதிர்பார்க்கிறது.

திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை பிராந்திய கிளைகள் ஊடாக மேலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் அதிகாரிகளினால் பிரதமருக்கு நினைவு பரிசொன்று வழங்கப்பட்டதுடன், பிரதமரினால் கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவர் ஹிதெகி டனகாவுக்கு நினைவு பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply