ரயில் பயணிகள் அசௌகரியத்தில்! சுமேத சோமரத்ன

வாராந்த அனுமதிப்பத்திர பற்றுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புகையிரதங்களில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்காக புகையிரதங்களில் பயணிப்பதற்கு பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு இன்று புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாகாணத்துக்குள் மட்டும் இந்த புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வாராந்த அனுமதிப்பத்திர பற்றுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே புகையிரதங்களில் பயணிப்பதற்கு, திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழல் காரணமாக புகையிரத போக்குவரத்து தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்ததால், அத்தியாவசிய சேவைக்காகப் பயணிக்கும் பயணிகள், வாராந்த அனுமதிப்பத்திர பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவில்லை.

புகையிரதங்களில் பயணிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் அவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அரசாங்கம் தற்போதைய நிலையில், அரச பொறிமுறையை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. அலுவலகப் பணிகளிகளுக்காக ஊழியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிகள் பயணிப்பதற்கு பிரதான, பாதுகாப்புடன் பயணிக்கக்கூடிய ஒரு மார்க்கமாக புகையிரத சேவைகள் காணப்படுகின்றன.

புகையிரதங்களினூடாக அவர்கள் பயணிப்பதற்கு தேவையான சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு திணைக்களம் அசமந்தப் போக்கை கொண்டுள்ளது.

அதேபோன்று, ஆரம்பிப் பிரிவு வகுப்புகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. சுமார் ஒரு வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் புகையிரதங்களில் பயணிப்பதற்காக வாராந்த அனுமதிப்பத்திரத்துக்கான பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவில்லை.

இதன் காரணமாக மாணவர்களுக்கும் அதேபோன்று ஆசிரியர்களுக்கும் புகையிரதங்களில் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் சிரமங்களின்றி பயணிப்பதற்காக நாம் அறிமுகப்படுத்திய நடைமுறையை புகையிரத திணைக்களம் செயற்படுத்தியிருக்கலாம்.

குறிப்பிட்ட ஒழுங்குமுறைக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கும் பயணிகளுக்கு ரயிலில் பயணிப்பதற்கு அவசாகத்தை வழங்க முடியும். வாராந்த அனுமதிப்பத்திர பற்றுச்சீட்டு மட்டுமன்றி, பற்றுச்சீட்டுக்களையும் எம்மால் வழங்க முடியும் என்பதை நாங்கள் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

Leave a Reply