பொதுச்…

பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸையும் நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைகளுக்கு பாராளுமன்ற பேரவை தனது இணக்கத்தை வழங்கியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நேற்றுமுன்தினம் (26) கூடிய பாராளுமன்ற பேரவையில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

வி. சிவஞானசோதியின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர்  வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க  அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் வடமாகாண ஆளுநராகக் கடமையாற்றியிருந்தார். இது தவிரவும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

ஒன்லைன் முறையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஆகியோர் இணைந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply