ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஒலுவில் துறைமுக வளாகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டதுடன், துறைமுக குளிர்சாதன வசதிகள் மேம்பாடு, மீன் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
ஜனாதிபதி, பிரதமர் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். கடந்த காலங்களில் இந்த அரசின் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற தயாராக உள்ளேன்.
இந்த ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பியும் கரிசனைகொண்டு என்னிடமும், ஜனாதிபதி, பிரதமர் மஹிந்தவுடனும் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
மீனவர்கள் இன்று என்னை சந்தித்து முன்வைத்த பிரச்சினைகளை நான் கூடிய விரைவில் தீர்த்து வைக்க தயாராக உள்ளேன். யாருக்கும் பயப்பட தேவையில்லை.
மீனவர்களுக்கு தேவையாக உள்ள ஒலுவில் துறைமுகம் யாருக்கும் பாதில்லாத வகையில் பிரச்சினைகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில், அட்டாளைசேனை பிரதேச செயலாளர், கடற்றொழில் திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர் நடராஜா ஸ்ரீரஞ்சன், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். {ஹதா, கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படை அதிகாரிகள், கடற்றொழில் திணைக்கள உயரதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மீன்பிடி அமைப்புக்கள், மீன்பிடி சம்மேளனம், மீன்பிடி சங்கங்களின் சமாசம் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், மீனவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






