யாழ்ப்பாண தபாலக நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,யாழ், அஞ்சல் அலுவலக கோலவுடை ஊழியர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். தபாலகத்தின் ஸ்திரமற்ற நிர்வாகம் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அராஜகத்தால் அஞ்சல் ஊழியர்களுக்கு எதிரான அதிகாரிகளின் செயல்பாடுகளால் தொடந்து பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு நீதி வேண்டி அறவழிப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில், நிம்மதியாக கடமையாற்ற விடுங்கள், கோலவுடை ஊழியர்களை நசுக்கதே,அராஜக நிர்வாகத்தை திணிக்காதே, மழை வெயில் என்று பாராது கடமையாற்றும் ஊழியரை மதிப்பளி, போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது ஆர்ப்பாட்டம் குறித்து கோலவுடை ஊழியர்கள் வெளியிட்ட அறிக்கையில்,
யாழ், அஞ்சல் அலுவலக கோலவுடை ஊழியர்களாகிய நாம் குறிப்பிட்ட சில காலமாக அஞ்சல்வளாக நிர்வாகத்தினரது முரண்பாடுகள் மற்றும் அதிகார மனப்பாங்கான செயற்பாடுகள், எம்மில் பதவி உயர்வு பெற்றவர்களை வைத்து பழிவாங்கும் நடவடிக்கை என பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றோம்.
இப்பிரச்சினைகள் தொடர்பாக வளாக அதிகாரிகளுடன் பல கலந்துரையாடல்கள் மற்றும் எழுத்து மூலமான கோரிக்கைகள் பல்வேறு வழிகளிலும் நியாயமான தீர்வொன்றிற்காக முயற்சிகளை மேற்கொண்டும் பலன் ஏதும் அளிக்கவில்லை.
ஆகவே தொடர்ந்து நாம் நசுக்கப்படாது எவ்வாறாயினும் கீழ்க் குறிப்பிடப்படும் எமது இவ் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மனிதாபிமானம்,மனிதநேயம் என்றவகையில் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.











