முந்தல் பொலிஸ் நிலையத்திற்கு முன் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் முந்தல் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி படுகாயமடைந்துள்ளார்.
பல்லம பகுதியைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. எம். ரம்பண்டா என்பவரே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த போக்குவரத்து பொறுப்பதிகாரி கடமை நிமித்தம் பொலிஸ் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே செல்ல முற்பட்ட போது, சிலாபத்திலிருந்து புத்தளம் பகுதி நோக்கிச் சென்ற பட்டா லொறியொன்று குறித்த பொறுப்பதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
அதனையடுத்து, புத்தளத்திருந்து சிலாபம் நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு சொகுசு கார் ஒன்றும் அதே சமயம் பொறுப்பதிகாரி மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விரண்டு வாகனங்களும் இவ்வாறு ஒரே சந்தர்ப்பத்தில் மோதியதில் படுகாயமடைந்த பொறுப்பதிகாரியை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
எனினும், பொறுப்பதிகாரியின் நிலைமை மோசமடைந்து காணப்படுவதாகவும், அவரது உடலில் சில பாகங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் சிலாபம் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களின் சாரதிகளும் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.







