யாழ்ப்பாணம் மாவட்டத்தில் என்ன நடக்கின்றது. மாவட்ட அபிவிருத்திகளில் ஏன் மூடு மந்திரம் என மாவட்டச் செயலாளரிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று வினாவினார்.
யாழ். மாவட்டச் செயலகத்திற்கு நேற்று முன்தினம் நேரில் சென்ற சுமந்திரன் எம்பி , மாவட்டச் செயலாளரிடம் சுமார் ஒரு மணி நேரம் இது தொடர்பில் பிரஸ்தாபித்தார்.
இதன் போதே மேற்கண்டவாறு வினாவியுள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பில் முற்கூட்டியே அனைவரும் அறியக்கூடியதான நிலமை காணப்பட்டது.
இருந்தபோதும் தற்போது மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூட ஏதும் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஏன் இந்த நிலமை என கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளரிடம், சுமந்திரன் வினாவினார்.
தமது ஆட்சேபனைகள் மற்றும் மக்கள் பணியில் மாவட்டச் செயலகம் முன்னெடுக்கும் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் வெளிப்படை தன்மையற்ற விடயங்கள் தொடர்பிலும் நேரடியாக எடுத்துரைத்தார்.
இதன்போது மாவட்டத்தில் தற்போது இடம்பெறும் திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றில் உள்ள முன்னேற்ற நிலைமை தொடர்பிலும் மேலதிக செயலாளர் முரளிதரன் ஊடாக மாவட்டச் செயலாளரினால் சுமந்திரன் எம்பிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இருந்தபோதும் பல விடயங்களில் மாவட்டச் செயலாளர் வழங்கிய கருத்தில் சுமந்திரனுக்கு உடன்பாடு இன்மையே காணப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமந்திரன் எம்பியுடன், வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.






