நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதை அடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான அலுவலக புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும், இரவு 7 மணியின் பின்னர் தூர மற்றும் குறுந்தூர புகையிரத சேவைகள் என்பன வழமை போன்று இடம்பெறுவதில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய இரவு 7 மணியின் பின்னர் பயணிகளின் அவசியத்தன்மை கருதி மாத்திரம் புகையிரத சேவைகளை முன்னெடுக்க உள்ளதாகத் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது 180 முதல் 200 புகையிரத சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாளை முதல், காங்கேசன்துறை வரை இடம்பெறும் நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவையை மீண்டும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு முதல் கண்டி வரையில் சேவையில் ஈடுபடும் நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவையும், நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் மண்சரிவு காரணமாக, பதுளைக்கான புகையிரத சேவை தொடர்ந்தும் தடைப்பட்டே காணப்படும்.
நிலைமை சீரானதன் பின்னர், அந்தப் புகையிரத சேவையும் மீள ஆரம்பிக்கப்படும்.
யாழ் தேவி புகையிரதம் தற்போது யாழ்ப்பாணத்துக்கான சேவையில் ஈடுபடுகின்றது.
ஏனைய புகையிரதங்களையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், அடுத்த கலந்துரையாடல்களில், இரவுநேர அஞ்சல் புகையிரத சேவைகளையும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகத் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.






