புத்தளத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள், இந்த ஆட்சியார்கள் ஒழிய வேண்டும் எனக் கூறி, விஷேட பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.
உடப்பு- கரம்பை பிரதான வீதியின், வட்டவான் ஸ்ரீ காளியம்மன் ஆலயத்திற்கு முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
விவசாயிகளுக்கு உரத்தை வழங்கக் கோரியும், எரிபொருள் உட்பட பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் , ஊழலை நிறுத்தக் கோரியும் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் , சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
புத்தளத்தில் உள்ள அதிகளவிலான விவசாயிகள் ஜீவனோபாய தொழிலாக விவசாயத்தை பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் நிலையில், தமது விவசாயத்திற்கு உரம் மற்றும் கிருமி நாசினி இல்லாமல் தாங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
‘அரசே! விவசாயிகளின் வயிற்றில்அடிக்காதே’, ‘இனவாதம. வேண்டாம், விவசாயிகளுக்கு உரத்தை வழங்கு’, ‘ஆட்சி செய்ய முடியாவிட்டால் நாட்டை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு போங்கள்’, ‘ அரசே! விவசாயத்தை அழிக்காதே’ இதுபோன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டத்து.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் வட்டவான் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் தேங்காய் உடைத்து இந்த ஆட்சியார்கள் ஒழிய வேண்டும் எனக் கூறி, விஷேட பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், இனோக் துஷார பத்திரன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.











