
நாட்டில் அடுத்து நடைபெறும் தேசிய தேர்தல் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டின் வளங்களை திரும்ப பெறுவதற்காக மக்களின் ஆணையை பெறும் சர்வஜன வாக்கெடுப்பாக இருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச (Wijedasa Rajapaksha) நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்து நடைபெறும் முதலாது தேர்தல் சர்வஜன வாக்கெடுப்பாக நடத்தப்படும். வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டின் தேசிய வளங்களை திரும்ப பெறுவதா இல்லையா என்பதாக அது இருக்கும்.
அத்துடன் அந்த தேர்தல் பொதுத் தேர்தலாகவோ, ஜனாதிபதித் தேர்தலாகவோ இருக்கலாம். சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை திரும்ப பெற போவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது நாட்டின் வளங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
சீனாவிடம் நாட்டின் இதயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் நாட்டின் நுரையீரல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வது சாபம் கிடைக்கும் பாவச் செயல்.
எதிர்க்கட்சியில் இருந்த போது , மகிந்த ராஜபக்ச, நாட்டின் வளங்களை காக்க போவதாக கூறி மார்பில் தட்டிக்கொண்டு மண்ணை முத்தமிட்டார். அவ்வாறு செய்த அவரது இருதயம் துயரப்படும் என நான் நினைக்கின்றேன்.
எமக்கு எதனையும் மீதம் வைக்காது, அனைத்தும் ஒவ்வொன்றாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வளங்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற அதேவேளை நாட்டை மிக மோசமான அளவில் கடனாளியாக மாற்றி இருப்பதாகவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.






