
மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர் தனது சோதனை கொவிட் வைரஸ் எதிர்ப்பு மாத்திரையை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பல நாடுகளுக்கு வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த அமெரிக்க நிறுவனத்திற்கும் ஐ.நா ஆதரவு சர்வதேச பொது சுகாதார குழுவான மருத்துவ காப்புரிமை குழாம் என்ற அமைப்புக்கும் இடையிலேயே இந்த ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் காப்புரிமை மீறல் அச்சுறுத்தல் இன்றி 95 நாடுகளுக்கு இந்த மருந்தை உற்பத்தி செய்து விநியோகிக்க வழிவகுத்துள்ளது.
இதில் பெரும்பாலான நாடுகள் ஆபிரிக்கா மற்றும் ஆசியவைச் சேர்ந்தவை என்பதோடு இதன்மூலம் உலக மக்கள் தொகையில் சுமார் 53 வீதமானவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். “அனைத்து மக்களுக்காகவும் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவர உதவுவதற்கு விஞ்ஞான ரீதியில் முன்னோக்கிச் செல்லும் கடப்பாட்டில் பைசர் தொடர்ந்து செயற்படுகிறது” என்று பைசர் தலைமை நிர்வாகி அல்பர்ட் பவுர்லா தெரிவித்தார்.
“வாய்வழியான வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை கொவிட்-19 தொற்றின் தீவிரத்தை குறைப்பதற்கு முக்கிய பங்காற்றுவதோடு எமது சுகாதார அமைப்பு மற்றும் உயிர்களை காப்பதில் பாதிப்பை குறைக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாக்ஸ்லோவிட் என்ற இந்த மாத்திரையை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்காக அமெரிக்க நிர்வாகத்திடமும் பைசர் அங்கீகாரம் கோரியுள்ளது.
இந்த மாத்திரை மீதான இறுதிக் கட்ட சோதனைகளில், கடுமையான நோய் அபாயத்தில் உள்ள பெரியவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அல்லது உயிர் ஆபத்தை 89 வீதம் குறைப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா எங்கும் 1,219 நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் தரவுகள் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் அதிக செயல்திறனை காட்டுவதோடு இது ரிடோனாவிர் என்று அழைக்கப்படும் பழைய வைரஸ் எதிர்ப்பு மருந்துடன் இணைத்து வழங்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிக அபாயம் உள்ளவர்கள் வீட்டிலேயே மாத்திரையை உட்கொள்வதன் மூலம், மருத்துவக் கட்டமைப்பின் பளுவைக் குறைக்கலாம்.
தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமங்களையோ, தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்ைக குறைவாகவோ உள்ள நாடுகளுக்கு புதிய மாத்திரை முக்கியமானதாக அமையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மெர்க் மருந்தாக்க நிறுவனம், தனது மோல்னுபிரவீர் மாத்திரைக்கு ஒப்புதல் பெற ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது.
இலேசானது முதல் மிதமானது வரை நோய்த்தொற்று அறிகுறி கொண்ட பெரியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பது ஆகிய அபாயங்களை மோல்னுபிரவீர் மாத்திரை பாதியாகக் குறைக்கும் என்று மெர்க் கூறுகிறது.





