
இலங்கைக்கு வட கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதுடன், இன்று தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும் அடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இக்கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், வடமேல்மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமானஓரளவு பலத்த மழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.






