பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கொழும்பு நாராஹேன்பிட அபயராமய விகாரையில், வருடாந்தம் நடைபெறும், கிரி அம்மா தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு, இன்று முற்பகல் நடைபெற்றது.
நாராஹேன்பிட அபயராமாதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்திற்கமைய, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
வருடாந்தம் நடத்தப்படும் இந்த தானம் வழங்கும் நிகழ்வானது, இம்முறை 19 ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, மஹா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து, தானம் வழங்கும் நிகழ்வில் ஈடுபட்டதுடன், பிரதமர் தலைமையில், நூறு கர்ப்பிணி தாய்மார்களுக்கு, உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வை குறிக்கும் வகையில், பிரதமரினால், ஒரு கர்ப்பிணி தாய்க்கு, உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள், பிரதமரினால் விடுவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், நாராஹேன்பிட அபயராமாதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர், பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்களான காமினி லொகுகே, நிமல் சிறிபால டி சில்வா, சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான சிறிபால கம்லத், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ருக் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






