இலங்கையில் 55 இலட்சம் மக்களை உணவுக்காக போராட வைத்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் நேற்று (05-09-2022) நடைபெற்ற லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய ராஜபக்சக்களை நாட்டு மக்கள் புறக்கணித்த நிலையில் தற்போது மீண்டும் ராஜபக்சக்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாது என இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்ததால் நாடு திவாலான நிலைக்கு வந்துள்ளதாக பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்திய பசில் ராஜபக்ச தரப்பு குறிப்பிடுவது வேடிக்கையானது.
நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மையைக் குறிப்பிடாமல் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொய் சொல்வதும் பொருளாதார நெருக்கடியை மோசமாக்கும் மற்றொரு காரணியாகும்.
பொருளாதார நெருக்கடியின் போதும் தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொதுஜன பெரமுன செயற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் அக்கறை காட்டவில்லை.
மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியால் இன்று 55 இலட்சம் மக்கள் உணவுக்காக போராட வேண்டியுள்ளது என்றார்.