‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கான பொது மக்களின் நிலைப்பாட்டைக் கோரும் செயற்திட்டம் இன்று வவுனியாவிலிருந்து ஆரம்பமானது.
இதேவேளை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டலிலும் குறித்த செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணிகள், தொழிற்சங்கங் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், மாணவர் மற்றும் சிவில் பிரஜைகள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இவ்வாறு கருத்து கோரப்பட்டது.
இந்தச் செயற்றிட்டம் நாளை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும், எதிர்வரும் தினங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.
வவுனியா, போகஸ்வௌ பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சேதன உணவு உற்பத்தியாளர் சங்கத்தின் அலுவலகத்திலும், வவுனியா மாவட்ட செயலகத்திலும் இன்று இந்தக் கருத்து கோரல் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த பிரதேசங்களில் வசிக்கும் வௌ;வேறு இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வருகை தந்திருந்தவர்கள் பல கருத்துக்களை முன்வைத்தனர்.
நீண்ட காலமாக தமது மனங்களில் இருந்த எண்ணங்களை இவ்வாறு செயலணிக்கு அறிவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதேவேளை, மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஒரே நாடு ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு தமது நிலைப்பாடுகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி, தபால் பெட்டி இல.504 கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.






