உக்ரைனில் இலக்குகள் அனைத்தும் எட்டப்படும் வரை போர் தொடரும்: புடின் திட்டவட்டம்!

உக்ரைனில் எந்த இலக்குகளை அடைவதற்காக ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ நடத்தப்படுகிறதோ, அந்த இலக்குகள் அனைத்தும் எட்டப்படும் வரை போர் தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தொலைதூர கிழக்கே உள்ள துறைமுக நகரான விளாதிவோஸ்டோகில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வருடாந்திர பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உண்மையில், உக்ரைனில் நாம் போரைத் தொடங்கவில்லை. 2014ஆம் ஆண்டு முதல் அங்கு நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ தொடங்கப்பட்டது.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பது நமது கடமையாகும். அந்தக் கடமை நிறைவேற்றப்படும் வரை அங்கு போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து நம்மை பின்வாங்க வைத்துவிடலாம் என்று மேற்கத்திய நாடுகள் தப்புக் கணக்கு போட்டன.

உண்மையில், அந்த நாடுகள் விதித்த பொருளாதாரத்தடைகள் ரஷ்யாவின் இறையாண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் மேற்கத்திய நாடுகள் தொடுத்த தாக்குதல்களை ரஷ்யா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

பொருளாதாரத் தடைகளால் நாம் எதையும் இழக்கவில்லை; இழக்கப் போவதுமில்லை. ரஷ்யப் பொருளாதாரம் இந்த ஆண்டு 2 சதவீதம் சரிவைச் சந்திக்கலாம். ஆனாலும் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை வலுவாகவே உள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு நிர்ணயிக்க மேற்கத்திய நாடுகள் மேற்கொள்ளும் திட்டம் அபத்தம் நிறைந்ததாகும். அந்த திட்டத்தை மேற்கத்திய நாடுகள் செயல்படுத்தினால் அந்த நாடுகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகமாகத்தான் செய்யும்.

நம்மிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஆசியாவில் போதிய நாடுகள் உள்ளன. சர்வதேச சந்தையில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு அபரிமிதமான தேவை உள்ளது. எனவே, மேற்கத்திய நாடுகள் எவ்வளவு முயன்றாலும் நமது கச்சா எண்ணெய் விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது.

நார்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் மூலம் தங்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதை நிறுத்திவைத்துள்ளதன் மூலம் உக்ரைன் விவகாரத்தில் எரிவாயு விநியோகத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், உண்மையிலேயே அந்த நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால்தான் நார்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய முடியாமல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் இப்போது அமோதித்தால் கூட, நார்ட் ஸ்ட்ரீம்-2 குழாய் வழித்தடம் மூலம் உடனடியாக எரிவாயு விநியோகம் செய்யத் தயாராக இருக்கிறேன்’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *