இந்திய இலங்கை மீனவர்களிற்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து சுமூக நிலையை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, தனுஸ்கோடி, பாம்பன் பகுதிகளுக்கு நேற்று சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன் பிடிப்பதால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும், அதனால் இந்திய மீனவர்களிற்கு ஏற்படக் கூடிய சட்ட ரீதியிலான நெருக்கடிகள் தொடர்பிலும் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தியத் தூதுவரை நேரில் சந்தித்து கலந்துரையாடியதோடு இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று இந்தியத் தூதுவருடன் கலந்துரையாடினார்.
இவ்வாறு இடம்பெற்ற பேச்சுக்களின் அடிப்படையில் எல்லை தாண்டல் விடயத்தில் உள்ள நெருக்கடிகள் அதனால் எழும் விடயங்கள் தொடர்பில், தமிழக மீனவர்களிற்கு நேரில் எடுத்துக் கூறும் வகையிலும் அங்கு உள்ள நிலமைகளை நேரில் பார்வையிடவும்,இராமேஸ்வரத்திற்கு சென்று மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்ட தூதுவர் தனுஸ்கோடி, பாம்பன் பகுதிகளிற்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.







